
 இரண்டு  மூன்று நாட்களாகவே மனதில் ஒருவித சோர்வு. பேப்பரில் வந்த ராசிபலனும்  தைரியம் தரும் வகையில்       அமையவில்லை. காலையில் அலுவலகம் செல்லும்  வழியில் ஒரு ஆட்டோக்காரன் வேறு மோதப் பார்த்தான்.
 அலுவலகத்திலோ, இன்னொருவர் செய்த தவறுக்கு எனக்கு பாட்டு.
 ‘என்ன வாழ்க்கை? ச்சீசீ! ‘ என்றது மனது.
 மத்தியதர வாழ்க்கையில் இருந்து,மெல்ல  முன்னேறுகிற ஒரு இளைஞன்தான் நான். திருமணம் ஆகிவிட்டது. சொந்த வீடும்  கட்டிவிட்டேன். ‘பலரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் ‘ என  அடிக்கடி தோன்றும். இதனால் ஒரு பக்கம் கர்வமும், இன்னொரு பக்கம்  மறைந்திருக்கும் கடன் சுமையும் தலையை அழுத்தும். உள்ளுக்குள் நிம்மதி  குறைந்தது. வாழ்க்கையில் பயம், பதற்றம் அதிகரித்தது.
 அதுமாதிரி சமயங்களில், இறை வழிபாடும்,ஜோதிட நம்பிக்கையும் என்னை கவலையில் இருந்து விடுபட வைக்கும் ஒரு போதை பொருளாக அமைந்தது.
 நாளை சுகமாக இருப்போம் என நம்ப வைத்தது. எனவே  சாஸ்திர சம்பிரதாய விஷயங்களிலும், முற்போக்குவாதிகள் அறிவிக்கும்  மூடநம்பிக்கை விஷயங்களிலும்…இலைமறை காயாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
 அன்றைய தினம், அப்படித்தான் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன்.
 ‘‘கைரேகை பார்க்கலியோ… ஜாதகம் பார்க்கலியோ ” என சாலையில் கூவிக் கொண்டே வரும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன்.
 கைலி, தையில் குல்லா, தோளில் ஒரு துணிப்பை சகிதம் ஒருவன் கூவிக்கொண்டு வருகிறான் என தெரிந்தது.
 சட்டென என் மனதில்…‘ இவனிடம் குறிகேட்டால் என்ன? ’ தோனிற்று.
 ‘கூலி அதிகம் கேட்டுவிட்டால் ’ -அடுத்த கேள்வி எழுந்தது. ‘ கேட்டுப்பார்ப்போம், குறைவாக இருந்தால் கூப்பிடுவோம் ’ -முடிவு செய்தேன்.
 அவனும், என் மனநிலை அறிந்தவன் போல்… என் வீடு வந்ததும், நின்று ‘‘கைரேகை பார்க்கிறீங்களா? ”என்றான்.
 ‘‘கைரேகைக்கு எவ்வளவு?” என்றேன்.
 ‘‘பதினோரூவா கொடு ”  என்றான்.
 ‘அதிகமில்லை ’ என மனசு சொல்ல ‘‘உள்ளே வா ” என்றேன்.
 வாசல்கேட்டை திறந்துகொண்டு, வீட்டுத் திண்ணையில் வந்த அமர்ந்தான்.
 அம்மாவை மட்டும் வெளியில் அழைத்தேன். மனைவி ‘என்ன ’ என்று ஜாடை காட்டினாள். ‘‘நீ வராதே ” என்றேன் மெதுவாய்.
 எங்களுக்கு தெலுங்கு தெரியுமென்பதால்… அம்மா  கோபமாய் கிசுகிசுத்தாள். ‘‘நமக்குத்தான் குடும்ப ஜோதிடர் நெடுங்குடி பசுபதி  இருக்காரே…இவன எல்லாம் ஏன் கூப்பிடுறே” என்பதுதான் அதன் பொருள்.
  ‘‘கூப்பிட்டுவிட்டேன். கூலி பதினோரூவாதான் ”  என்று சாந்தப்படுத்திவிட்டு, அவன் எதிரெ அமர்ந்து கைநீட்ட தயாரானேன்.  அம்மாவும் பக்கத்தில் அமர்ந்தாள்.
 எனது வலது கையின் நடுவிரலை பிடித்து…வெளிச்சம்  படுமாறு கையை திருப்பியவன்…அழமாய் உற்று நோக்கினான். சில நொடிகளுக்குப்  பிறகு, எனது முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னான். ‘‘ உன் மீது  விஷப்பார்வை விழுந்திருக்கு. பலருடைய திருஷ்டி பட்டிருக்கு. உன்னுடைய  குலதெய்வம் இப்போ வீட்டுல இல்ல. அது வெளியேறி மூணு மாசம் ஆகுது. நீ பார்க்க  வெள்ளையும், சொள்ளையுமாக தெரிந்தாலும்…கையில் லெட்சுமி இல்ல. எவ்வளவு  வந்தாலும் பத்தாது.
 இந்த ஆடி மாசத்துக்குள்ள… பெரிய இழப்பு ஒண்ணு,  உனக்கு வர இருக்கு. உடம்புல ஒரு அங்கம் நிரந்திரமா ஊனமாக போகுது. நீ  சீரழியணுமின்னு இரன்டு வருஷமா ஏவி விட்ட தீய சக்தி ஒண்ணு சுத்தி சுத்தி  வருது. இதுவரைக்கும் உன் வீட்டுல இருந்த குல தெய்வம்தான், உன்னை காவந்து  செஞ்சிச்சிது.
 இப்ப அந்த தெய்வமும் வெளியில போயிட்டுது. அத  உள்ளே விடாம தடை பண்ணியிருக்கு…” -வந்தவன் சொல்லிக்கொண்டே போக ,எனக்கு  இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது.
 ஒருபக்கம் மரண பயம் வந்து கவ்விக் கொள்ள…இவன்  மந்திரவாதியாக இருந்துவிட்டால், இவனிடம் சிக்கிவிடக்கூடாதே என்கிற  எச்சரிக்கை உணர்வு இன்னொரு பக்கம் ஏற்பட்டது.
 மந்திரவாதிகள்…இப்படி பயமுறுத்தி நிறைய பணம், நகை என பிடுங்கி விடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கேன்.சுதாரித்துக்கொண்டு சொன்னேன்.
 ‘‘நல்ல நேரத்துல வந்து சொன்னீங்க. இந்த  ஆபத்துலேர்ந்து தப்பிக்க, என்ன பரிகாரமுன்னு எங்க ஆஸ்தான ஜோதிடர் கிட்ட  கேட்டு செஞ்சிக்கிறேன். நன்றி, நீங்க வாங்க ‘‘ என்று சொல்லிவிட்டு,  அம்மாவிடம் ‘‘ பதினோரூவா எடுத்துவா ”
 அவன் ‘‘எதுக்கு ” என்றான்.
 குழப்பமாய், ‘‘உன்னுடைய தட்சணை ‘‘ என்றேன்.
 ‘‘அந்தக்  காசை நான் வாங்கமாட்டேன். நான் வாங்கக்கூடாது. மரண வாக்கு கொடுத்துவிட்டு,  அந்தக் காசை வாங்கினால், நான் என்னாவது? எனக்கு வேண்டாம். எங்காவது கோயில்  உண்டியலில் போட்டுவிடு. ”-பையை தோளில் மாட்டியபடி புறப்பட்டான். நானும்,  அம்மாவும் விக்கித்து நின்றோம்.
 
 காலையில்  ஆட்டோ மோத வந்த சம்பவம் ஒரு கணம் நினைவில் வந்து போனது. இவன் சொல்வதுபோல்,  மரணத்தை நோக்கி ஏதேனும் தீயசக்தி, என்னை விரட்டுகிறதா? பிடி வதாமாக  தட்சணைகூட வாங்காமல் புறப்படுகிறானே…‘ தடுமாறினேன்.
காலையில்  ஆட்டோ மோத வந்த சம்பவம் ஒரு கணம் நினைவில் வந்து போனது. இவன் சொல்வதுபோல்,  மரணத்தை நோக்கி ஏதேனும் தீயசக்தி, என்னை விரட்டுகிறதா? பிடி வதாமாக  தட்சணைகூட வாங்காமல் புறப்படுகிறானே…‘ தடுமாறினேன்.
 ‘இதிலிருந்து உடனே தப்பித்துவிட வேண்டும் ‘ -மரண பயத்தில் வாசல் கேட்வரை சென்ற அவனை மறுபடியும் அழைத்தேன்.
 இந்தமுறை, எனது அழைப்பில் அவனிடம் ‘உயிர் பிச்சை ‘ கேட்கும் தொனி வெளிப்பட்டது.
 அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தவன்…
‘‘பார்க்க நல்லவனாக தெரியிற. உன்னை இப்படியே விட்டுவிட எனக்கும் மனசு இல்ல.  இதிலிருந்து தப்பிக்க வழியிருக்கான்னு ஆண்டவன வேண்டி கேட்டுப்  பார்க்கிறேன், இரு…” என்றவன், பழையபடி வந்து அமர்ந்தான்.
 இப்போது அவனைப் பார்க்க ஒரு சாதாரண ஜோதிடனாக  எனக்குத் தெரியாமல்…மரணத்தில் இருந்து என்னை விடுவிக்க இருக்கும் மகானாக  தெரிந்தான். கைகட்டி பவ்வியம் காட்டினேன்.
 குனிந்து தரையை ஊதி, சுத்தப்படுத்தினான்.  பையில் இருந்து ஒரு டைரியை எடுத்தான். அதில் திராவிட கட்சியைச் சேர்ந்த  பலகுட்டி அரசியல்வாதிகளின் விசிட்டிங் கார்டுகள் இருந்தன.
 ‘‘ இவர்கள் எல்லாம் என்னிடம் குறி கேட்டவர்கள்.
இன்றைக்கு பெரிய மனுஷங்க… புரியுதா. பயப்படாதே. கைகட்டாதே. கையை எடு ‘‘ என்றான். தலையாட்டினேன்.
 ‘‘உள்ளே போயி மூணு ஊதுபத்தி எடுத்துவா ‘‘ என்றான்.
 வீட்டிற்குள் நுழைந்தேன்.
 கதவுக்கு பின்னால் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த மனைவி, கலவரத்துடன் ‘‘என்ன ” என்றாள்.
 என்னை மீறி என்னமோ நடக்குது. நீ வேளியே  வந்துவிடாதே ” என்றேன். கர்ப்பவதியாக இருக்கும் அவள், இதெல்லாம் பார்க்க  வேண்டாமே என்கிர பதற்றத்தில் அப்படிச் சொன்னேன்.
 ஊதுபத்தி எடுத்துச் சென்றதும் பணிவாகச் சொன்னேன். ‘‘என்னிடம் தற்சமயம் தங்களுக்கு கொடுக்க அதிக பணமில்லை..”
 பட்டென்றூ கோபமாகப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ  கொடுக்கிற பணத்துல நான் என்ன கோடீஸ்வரனாக ஆகிவிடப் போறேனா… பணம் பணமுன்னு  சொல்லாதே. உயிர் போனா வருமா? முதல்ல உனக்கு வர ஆபத்த தடுக்க முடியுமான்னு  பார்ப்போம் ” என்றான்.
 ‘‘ஒரு குவளை தண்ணீரும், ஒரு வெள்ளை பேப்பரும் எடுத்துவா ” என்றான்.
 கொடுத்தேன். ‘‘ரோட்டில் இருந்து இடதுகையால்… விரல் அளவுக்கு கொஞ்சம் மண் எடுத்துக்கொடு ” என்றான். அதையும் கொடுத்தேன்.
 பேப்பரில் அந்த மண்ணை வைத்து, அதனுடன்  ஊதுபத்தியில் கறுப்புநிரத்தில் இருக்கும் எரியும் பொருளை மட்டும் சுரண்டி  எடுத்து, அதை மண்ணோடு கலந்து பொட்டலாமாக மடித்தான்.
 ‘‘அந்த பொட்டலத்தை வீட்டின் ஈசானி மூலையில் வைத்து , ஓன்பது முறை தொட்டு கும்பிட்டு எடுத்துவா ” என்றான்.
 இப்படிச் சின்னச் சின்ன வேலைகள் சொன்னான்.  கிட்டதட்ட அவன் சொல்வதெல்லாம் கேட்கும்நிலையில்… கொஞ்சம் கொஞ்சமாக என் முழு  சுயகட்டுப்பாட்டு உணர்வையும் இழந்து போனேன்.
 அவன் எதிரே அமரச் சொல்லி… கையில் ஒரு தர்கா  படத்தை தந்தான். அருகில் இருந்த என் அம்மாவின் கையிலும் அதேபோல் ஒரு படம்.  ‘பிடித்துக்கொண்டு இருக்கவேண்டும்’ என்றான்.
 அரபியில் ஏதோ சொன்னான். தஸ், உஸ் என்று தலையை ஆட்டினான்.
 ‘‘இவன் மீது ஏவியிருக்கும் தீயசக்தியை விரட்டிவிடலாமா? ”
தரையில் இருக்கும் பொட்டலத்தை பார்த்துக் கேட்டான்.
 ‘‘முடியுமென்றால் நீ உயிர்பெற்று சுத்து ” என்றான்.
சொல்லி முடித்ததும் பொட்டலம் மெதுவாக சுத்தியது. மண் பொட்டலம் சுத்துகிறதே  என்கிற வியப்பு… நம்மீது படிந்துள்ள தீயசக்தியை எடுத்துவிடலாம்.. என்கிற  மகிழ்ச்சி இரண்டும் கலந்து என் முகத்தை மாற்றியது.

  
 இப்போது மந்திரவாதி நிதானமாக சொல்கிறான்…
 ‘‘உன்னை விட்டு தீயசக்தியை விரட்ட வேண்டுமெனில்… அதை உன் மீது ஏவி  விட்டவர்கள் என்ன செலவு செய்தார்களோ, அதி பாதி நீ கொடுத்து விட வேண்டும்.’’  என்றான்.
 ‘‘ அதிகமாக பணம் கேட்டுவிடாதே. இப்போது என்னால் முடியாது’’-பதறுகிறேன்.
 ‘‘சூ…பணம், பணம்… பேச்சை நிறுத்து. தூ…தூ…தூ…என்று மூணு வாட்டி சொல்லு’’ என்கிறான்.
 “தூ…தூ…தூ…” சொல்கிறேன்.
 மீண்டும் அரேபில் ஏதோ ஓதுகிறான். கையில் இருக்கும் சிறிய மந்திரகோலை  பொட்டலத்திடம் நீட்டி,அப்பொட்டலத்தைப் பார்த்து கேட்கிறான். ‘‘எதிரி  கொடுத்த ரூபாய் எவ்வளவு, ஜயாயிரமா?’’ பொட்டலம் அமைதி காக்கிறது.
 அடுத்து கேட்கிறான்…‘‘மூவாயிராமா?’’ பொட்டலத்திடம் பதில் இல்லை.  ‘‘ஆயிரத்தி ஜநூறா?’’ பொட்டலம் லேசாக அசைகிறது. அசைந்து, சுத்துகிறது.
 இப்போது என்னைப் பார்த்து சொல்கிறான்…‘‘எதிரி ஆயிரத்தி ஜநூறு கொடுத்து,  உனக்கு செய்வினை செஞ்சிருக்கான். ஒரு செயலுக்கு ஜநூறூ ரூவா வீதம்… மூணு  செயலுக்கு ஆயிரத்தி ஜநூறு கொடுத்திருக்கான்.’’
 ‘‘அந்த எதிரி யாருங்க’’
 அம்மா கேட்க…‘‘உன் கணவர் வழி சொந்தம்’’ என்கிறான். கணவர் வழி என்றதும், அம்மாவுக்கு திருப்தி.
 ‘‘என்ன காரணத்துக்காக செஞ்சிருக்காங்க’’
 ‘‘பொறாமை… உன் குடும்பம் முன்னேறுகிறதே என்கிற பொறாமை’’
 நாங்க, யாருக்கும் எந்த பாவமும் செய்யலியே…எங்களுக்கா இப்படி’’ அம்மா உணர்விழந்து சொல்கிறார்.
 ‘‘ச்சூ! கண்களை உருட்டி அம்மாவை அதட்டுகிறான். அம்மா மவுனமாகிறார்.
 தனது தோள் பையில் இருந்து சின்னதாக ஒரு துணிமூட்டையை எடுத்து, என் முன்னே வைக்கிறான்.
 ‘‘கட்டெல்லாம் அவுரணும்னு சொல்லி, இந்தகட்ட அவுரு’’ என்றான்.
 அவன் சொன்னது போலவே சொல்லி,அந்த  துணி மூட்டையின் முடிச்சை அவிழ்க்கிறேன்.எனக்கு உடம்பெல்லாம் தூக்கி வாரி  போடுகிறது. அதைப் பார்த்த என் தாயாரோ அலறிவிட்டார்.
 அப்போது என் முகத்திலும் அம்மா முகத்திலும் ‘‘பச்’’ என தெளிக்கப்பட்ட தண்ணீர் துளிகளின் குளிர்ச்சி இறங்குகிறது.
 அவன் தான் சொம்புத் தண்ணீரை எடுத்து எங்கள் முகத்தில்  அடித்திருக்கிறான். கூடவே ‘‘போச்சு சொல்லு, கெட்டதெல்லாம் போச்சு சொல்லு’’  அவன் மூன்று முறை கூற,கிளிப்பிள்ளையாய் திரும்ப நானும் மூன்று முறை  கூறுகிறேன்.
 என்னிடமிருந்து என்னோவோ, போய்விட்டது போல்… உணர்வு ஏற்படுகிறது. கண்கள் மட்டும் பிரிந்து கிடக்கும் துணி மூட்டையிலேயே இருக்கிறது.
 எதனாலோ செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தின், உடல் முழுவதும் கருகருப்பாய்  மனித ரோமங்கள். வாய் பகுதியில் அசல் மனித பற்கள்… பார்க்க கோராமாய்…ஒரு  மரக்கட்டையில், அந்த உருவத்தை வைத்து அதன் வயிற்றுப்பகுதியில்  பதினைந்துக்கு மேற்ப்பட்ட இரும்பு ஆணிகள் அரையப்பட்ட கொடூரம்… காலில்  சின்னதாக…அசைவில் சத்தம் தரக்கூடிய மணி கட்டப்பட்டிருக்கிறது.
 ‘‘ம்ம்…சாத்தான் மீது எழுனூற்றி ஜம்பது ரூபாய் பணம் வை. ஆயிரத்தி ஜநூறில் பாதி’’ அதட்டல் கேட்டு நிமிருகிறேன்.
 சீக்கிரம்’’ அவசரப்படுத்துகிறான்.
 தற்சமயம் அவ்வளவு ரூபா இல்லையே’’ இழுக்கிறேன்.
 ‘‘அதெல்லாம் தெரியாது…பக்கத்தில் யாரிடமாவது பணம் வாங்கி வந்து வை.  சீக்கிரம்’’ எழுந்து எதிர்வீடு நோக்கி ஓடுகிறேன். ‘‘அவசரம்,எழுநூற்றி  ஜம்பது பணம் கொடுங்க, சயந்திரம் தரேன்’’ கடன் வாங்கி வந்து அவனிடம்  நீட்டினேன்.
 ‘‘என்னிடம் நீட்டாதே…சாத்தானிடம் கொடு’’
 பணத்தை அந்த பொம்மை மீது வைத்தேன். ‘இனி தாமதிக்க கூடாது. இவன் உடனே  இடத்தை காலி செய்துவிட்டால் நல்லது’ என மனம் அலறுகிறது. புறப்படுகிற  நேரத்தில், தீடீரென அந்த பொம்மையோடு ஏதோ அரபியில் பேசுகிறான்.கோபம்  காட்டுகிறான்.
 நிமிர்ந்து பார்த்துச் சொல்கிறான் ‘‘சாத்தான் பிடிவாதம் பிடிக்கிறான்.  நான் வரமாட்டேன், இங்கேயே இருக்கிறேன் என்கிறான்’’ என்று சொல்ல, நாங்கள்  கலவரம் அடைகிறோம்.
 மீண்டும் ஏதோ பேசுகிறான்…‘‘ஏய் ஆசைக்கார சாத்தானே, சும்மாயிரு’’  அதட்டுகிறான். பதற்றமாய், என்னைப் பார்த்து சொல்கிறான், ’’நீ  அணிந்திருக்கிற தங்க ஆபரணங்களில் ஏதாவது ஓன்று வேண்டுமாம் வாங்கித்  தந்தால் வருகிறானாம்’’
 அவனது வார்ததைகளை, கேட்ட அம்மா, தன்னையும் அறியாமல்..தனது தாலிச் செயினை பிடித்துக் கொள்கிறார்.
 அவனது கண்களோ… என் கைவிரலில் இருக்கும் அரை பவுன் மோதிரத்தை உற்று நோக்கிறது.
 வேறு வழியில்லாமல்.. என் கைவிரல் மோதிரம், சில நொடிகளில்…அந்த பொம்மை மீது விழுகிறது.
 வேகவேகமாக மோதிரத்தையும் சாத்தானையும் மூட்டைகட்டி விட்டு  கூறுகிறான்…‘‘உன்னை சுத்தி வந்த தீயசக்தி..விரட்டப்பட்ட விபரமும், அதை  விரட்டிய விதமும் யாருக்கும் தெரியக்கூடது. புரியுதா! தலையாட்டுகிறேன்.  அந்த மண் பொட்டலத்தை கையில் தந்து விட்டு சொன்னான்…‘‘இதை மூன்று நாளைக்கு  உன் தலை மாட்டில் வைத்து படுத்து விட்டு, நான்காம் நாள் ஆற்றில் வீசி ஏறி’’
 அவனை அனுப்பி கதவை சாத்திவிட்டு,உள்ளே வந்த நாங்கள்… ஒருவருக்கு ஒருவர் புதிதாக பார்த்துக் கொண்டோம்.
 ‘‘கர்மம், அப்படியே போய் தலை முழுகுங்கள்’’ என்றாள் என் மனைவி.  குளித்துவிட்டு வரும்போது.. வெளியில் சென்றிருந்த என் வயதான தந்தையார்  வீட்டிற்குள் நுழைந்தார்.
 அவரிடம் என் தாயார் கேட்டார்…‘‘உங்க குடும்ப வழியில, நமக்கு எதிரா செய்வினை செய்யக் கூடியவங்க யாரவது இருக்காங்காளா?’’
 குடும்பத்தில், புதிய குழப்பமொன்று உருவாக துவங்கியிருப்பதை உணர்ந்தேன்.  தொலைபேசியில், அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொன்னேன். பணம், மோதிரம்  இழந்த மனது.. உள்ளுக்குள் ஆறுதல் தேடி அலைந்தது.
 ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியரும், எங்கள் குடும்ப நண்பருமான தியாகராஜனின் நினைவு வந்தது.
 குடும்பத்தில் எற்பட்ட பல்வேறு சோதனை காலத்திலும்… தொள் கொடுத்தவர்  அவர்…அவரை சந்திக்க தூண்டியது மனது. அவரோ, இதில் எல்லாம் நம்பிக்கை  இல்லாதவர். இருந்தாலும் அவரையே சந்திப்பது என் முடிவு எடுத்தேன்.
 எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட பேராசிரியார்..‘‘அந்த மண் பொட்டலம்  எங்கே ’’ என்றார்.வீட்டில் இருக்கு என்றேன்.எடுத்து வரச் சொன்னார். உடனே  அவரிடம், அதைச் சேர்த்தேன்.
 அவரது ஆராய்ச்சி மேஜை மீது, அந்த பொட்டலம் பிரிக்கப்பட்டது. அந்த மண்ணை  ஒரு விரலால் தடவிப்பார்த்துவிட்டு அருகில் இருந்த இரும்பு காந்த கட்டி  ஒன்றை எடுத்து நீட்டினார். உடனே..மண், ஊதுவத்தி துகள்களுக்கு மத்தியில்  இருந்து சில இரும்பு துகள்களும் காந்தத்தை நோக்கி புறப்பட்டன.
 ‘‘இந்த இரும்பு துகள்கள்தான், அந்த பொட்டலம் சுற்றியதற்கான சூட்சமம்,  மந்திரகோலின் நுனியில் தான் காந்தம் ’’ என்று சொல்லி சிரித்தார்  பேராசிரியர்.
 இக்கட்டுரை ‘சூ…மந்திரக்காளி ‘ என்ற பெயரில்
நக்கீரன் (7-9-1999) இதழில் வெளியானது.