கன்னியாகுமரி : திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர மொளை தரிசிக்க கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அமைக்கப்பட்டுள்ள இ-தர்ஷன் மையம் மூலம் இதுவரை சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். திருமலை திருப்பதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வர பெருமாளை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். திருவிழா காலம் மட்டுமன்றி சாதாரண நாட்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பலமணிநேரம் மட்டுமன்றி பல நாட்களும் ஆகிறது. இதனால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் இ-தர்ஷன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2010) டிசம்பர் மாதம் விவேகானந்தா கேந்திராவில் இ-தர்ஷன் மையம் துவங்கப்பட்டது. இந்த இ.தர்ஷன் மூலம் வெங்கடேஷ்வர பகவானை தரிசனம் செய்யும் தேதி மற்றும் கிழமையை முன் கூட்டியே பதிவு செய்வதாகும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இ-டிக்கெட் மையத்தில் தரிசன முன்பதிவு செய்ய விரும்பும் யாத்ரிகர் நேரடியாக முன்பதிவு மையத்திற்கு வர வேண்டும். யாத்ரிகரது புகைப்படம் எடுக்கப்பட்டு அவரது கை ரேகை கம்பியூட்டர் மூலம் பதிவு செய்யப்படும். தரிசனத்திற்கு தேவையான பணத்தினை கட்டியபின் அதற்கான ரசீது வழங்கப்படும். தரிசனமுறை முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளன்று இந்த ரசீதினை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கே யாத்ரிகரது புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தேவையான தொகையினை பணம் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றினை திருமலை திருப்பதி என்ற பெயருக்கு அடைக்கலாம். குழுவின் ஒவ்வொறு அங்கத்தினருக்கும் தனித்தனியே புகைப்படம் எடுக்கப்பட்டு கை விரல் ரேகையும் பதிவு செய்யப்படும். வழிபாட்டு விபரங்கள் அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் சுப்ரபாத தரிசனம் நபர் ஒன்றுக்கு ரூ.120 கட்டணமும், காலை 5.30 மணிக்கு நடக்கும் நிஜபாத தரிசனம் (வெள்ளி) நபர் ஒன்றுக்கு ரூ.200ம், மதியம் 1 மணிக்கு நடக்கும் அர்ஜித பிரமோத்ஸவத்திற்கு 200 ரூபாய் கட்டணமும், மதியம் 1 மணிக்கு நடக்கும் ஊஞ்சல் வழிபாட்டிற்கு ரூ.200 கட்டணமும், பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் வசந்த உற்சவத்திற்கு ரூ.300 கட்டணமும், மாலை 5.30 மணிக்கு நடக்கும் சஹஸ்ர தீப அலங்கார வழிபாட்டிற்கு ரூ.200 கட்டணமும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் விஷேஷ பூஜை தினங்களுக்கு ரூ.600 கட்டணமும், 5.30 மணிக்கு நடக்கும் அஷ்டதாரி பாதிபத்ம ஆராதனைக்கு (செவ்வாய்) 1,250 ரூபாய் கட்டணமும், 11.30 மணிக்கு நடக்கும் கல்யாண உற்சவத்திற்கு ரூ.500 கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். செவ்வாய்கிழமை விடுமுறையாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவேகானந்தா கேந்திராவில் தொடங்கப்பட்ட இந்த இ-தர்ஷன் சேவை மையம் மூலம் தினமும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அறிமுப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதால் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment