ஸ்ரீமாதா ட்ரஸ்ட் தர்மசாலை கிருஷ்ணமூர்த
அடையாறு கூவம் பாலத்தைப் பேருந்தில் கடக்கும்போது ஏதோ அரசுக் கட்டடம் போல தட்டுப்படுகிற இந்த தர்மசாலைக்குள் நுழைந்தால் ஆச்சர்யங்கள் ஆயிரம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சிகிச்சை முடிகிற வரை இலவச உணவும் தங்குமிடமும் தருகிற புனிதப் பணியை மாதா ட்ரஸ்ட் ஒன்பது வருடங்களாகச் செய்து வருகிறது. கைம்மாறு கருதாமல் இதுவரை ஏறக்குறைய எண்பதாயிரம் பேருக்கு மாதா உணவும் உடையும் நிழலும் கொடுத்திருக்கிறது.
``கேன்சருக்கு ஏழை, பணக்காரன்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருபக்கம் உயிரைத் துளைக்கிற வலி. இன்னொரு பக்கம் வாழ்க்கையே முடிஞ்சுடுமோங்கிற பயம். கையில் காசு இருக்குறவங்களுக்கு இந்த வேதனை மட்டும்தான். ஆனால் தினசரி கூலி வேலை செஞ்சு, வயிற்றைக் கழுவ வேண்டிய ஏழைகளுக்கு? வேலைக்குப் போறதை எல்லாம் அப்படியே நிறுத்திட்டு கேன்சருக்கு சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம். வேலைக்குப் போக முடியாததால் குடும்பச் செலவுகளுக்குத் திணற வேண்டிய அவலம். இப்படி கஷ்டப்படுற ஏழைகளின் வலியை நாம பகிர்ந்துக்க முடியாது. இலவசமா உணவும் தங்குமிடமும் கொடுத்து அவங்க பொருளாதாரச் சுமையையாவது குறைக்கலாமேங்கிற நோக்கத்தில் தான் மாதாவை ஆரம்பிச்சோம்'' என்று முன்னுரை தருகிறார் தர்மசாலையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான கிருஷ்ணமூர்த்தி.
ஐயம் தீர்த்திடு மணிகண்டா
ஒரு வரம் தருவாய் மணிகண்டா
ஓடியே வருவாய் மணிகண்டா
நோய்களைத் தீர்த்திடு மணிகண்டா!''
இந்தப் பிரார்த்தனைப் பாடல் நூற்றுக்கணக்கான உதடுகளிலிருந்து ஒரே நேரத்தில் புறப்படுகிறது. வார்த்தைகளில் பரிதவிப்பும் தன்னம்பிக்கையும் மாறி மாறி பிரதிபலிக்கிறது. நெகிழ்ச்சியில் கண்கள் கசிய, உதடுகள் பாடலைத் தொடர முடியாமல் தடுமாறுகின்றன.அடையாறு ஸ்ரீமாதா ட்ரஸ்ட் தர்மசாலையில் அன்றாடம் மாலையில் நடக்கும் நிகழ்ச்சி.
மாதாவில் நித்தமும் அன்னமிடும் கைகளுக்குப் பின்னால் இருப்பவை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டும் காஞ்சி சங்கர மடமும்
மாதாவின் விதிமுறைகள் மிகவும் எளிமையானவை. அடையாறு இன்ஸ்டிடியூட்டுக்கு வரும் ஏழ்மை நிலையிலுள்ள வெளியூர் நோயாளிகள் அங்கே சிகிச்சை பெற வேண்டிய கால அளவைப் பொறுத்து, நிர்வாகம் அவர்களை இங்கே அனுப்பி வைக்கும். கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிகிறவரை யாரேனும் ஒருவருடன் மாதாவில் தங்கலாம். பண்டிகை நாட்களில் வேஷ்டி சேலை எடுத்துக் கொடுப்பதிலிருந்து சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை ஊருக்கு பத்திரமாக அனுப்புவது வரை மாதா பார்த்துப் பார்த்துச் செய்யும் தொண்டுகளால் அந்த தர்மசாலை அவரவருக்கு சொந்த வீடாக உருமாறி நிற்கிறது.
சற்று அசந்தால் வாழ்க்கையையே பறித்து விடுவது போல் பயம் காட்டுகிற புற்றுநோயை எதிர்கொள்ள முக்கியத் தேவை மனோதிடம். அதை வளர்ப்பதற்கு ஆரோக்கியமான கவுன்சிலிங்குகள் வேண்டும் என்பதையும் மாதா ட்ரஸ்ட் நிர்வாகம் மறக்கவில்லை.
ஆரம்ப நாட்களில் தர்மசாலையின் ஒரு நாள் செலவு ஐயாயிரம் ரூபாய். இப்போ முன்னூறு பேர் தங்கியிருக்காங்க. இன்னிக்கு கையில் அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் தர்மசாலையை ஒரு நாள் நடத்த முடியும்.
சிலர் மாதாவைப் பற்றி யார் மூலமாகவோ கேள்விப்பட்டு, எங்களை மெனக்கெட்டு வந்து பார்த்து, தங்களால் முடிஞ்சநன்கொடையைக் கொடுத்துட்டுப் போறாங்க.
இன்னும் சிலர் தங்கள் அம்மா, அப்பா நினைவு நாட்களில் இங்கு வந்து, எல்லோருக்கும் ஒருவேளைச் சாப்பாடு போட்டுட்டுப் போறாங்க. நாலு பேருக்கு நல்லது பண்றதுக்காக ஆரம்பிச்ச காரியங்கள் என்றைக்கும் தடைபடாது நம்பிக்கையுடன் கிருஷ்ணமூர்த்தி சொல்வது முற்றிலும் உண்மை.
No comments:
Post a Comment