Friday, December 2, 2011
பாம்பு இயற்றிய பாடல்--பதஞ்சலி
பாம்பு இயற்றிய பாடல்
ஆதிசேஷன் எனும் நாகத்தின் மேல் அரிதுயில் கொண்டிருப்பவர் மஹா விஷ்ணு. ஆதிசேஷன் ஆயிரம் தலைகளை உடைய நாகமாக, பாம்பாக வடிவம் கொண்டு மஹாவிஷ்ணுவை எந்நேரமும் தாங்கிக் கொண்டிருப்பவர்.
ஆதிசேஷன் கத்ரு என்பவரின் புத்திரன். ஆயிரம் தலைகள் கொண்டவர். பாற்கடலில் விஷ்ணு மூர்த்திக்குப் படுக்கையாகவும், பரமபதத்தில் ஆசனமாகவும், நடந்தால் குடையாகவும் இருப்பவர். மஹா ஞானி. அதி அற்புத திறன் பெற்றவர். ஸஹஸ்ராவதானி.
ஒரு சமயம் பாற்கடலில் விஷ்ணு மூர்த்தி யோக நித்திரையில் அமைந்திருக்கின்றார். எப்பொழுதும் போல் இல்லாமல், விஷ்ணுவின் உடலில் திடீரென்று சிறு மாற்றம். அனுதினமும் விஷ்ணுவிடமே இருக்கும் ஆதிசேஷனுக்கு இந்த மாற்றத்தை மிக அற்புதமாக உணரமுடிந்தது. விஷ்ணுவின் உடலில் வியர்வை வெளியேறியது. ஆதிசேஷன், விஷ்ணுவிடம் தங்கள் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவினார்.
அதற்கு மஹா விஷ்ணு, "ஒரு சமயம் தேவலோகத்தில், நடராஜர் ஆனந்த நடனக் காட்சியளித்ததை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனந்த நடனம், அற்புத நடனம், அதிசய நடனம். அந்நடனத்தில் நான் முரசு கொட்டினேன். அந்த ஆனந்த பரவச நிலையை இக்கணமும் உணர்ந்ததால், முரசு கொட்டியதால் ஏற்பட்ட வியர்வையை உன்னால் உணரமுடிந்தது" எனக் கூறினார். மஹாவிஷ்ணு, தான் கண்ட ஆனந்த நடனக் காட்சியை ஆதிசேஷனுக்கு மிக அழகாக அனுபூதியாக உணர்த்தினார்.
ஆதிசேஷனுக்கு, மஹா விஷ்ணு உணர்த்திய காட்சியைத் தானும் காண வேண்டும் எனும் பெரும் ஆவல் உண்டாயிற்று. தன் விருப்பத்தை மஹாவிஷ்ணுவிடம் முன் வைக்கிறார். அவரும் தக்க உத்தரவு கொடுத்தார்.
அத்ரி மஹரிஷியின் மனைவி அநசூயை. கணவரின் சிவபூஜைக்கு உதவியாக இருந்தவர். மஹா தபஸ்வினி. ஒரு சமயம் ஆற்றங்கரையில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, ஆதிசேஷன் விஷ்ணு கொடுத்த வரத்தால் அநசூயையின் குவிந்த கரத்தில் (அஞ்சலி ஹஸ்தம்) வந்து, அவளின் பாதத்தில் விழுந்தார். பாம்பின் காலும், மனித முகமும் கொண்டு, அஞ்சலி செய்த கையில் வந்து, பாதத்தில் வந்து விழுந்ததால் பதஞ்சலி எனப் பெயர் பெற்று வளர்ந்து வந்தார்.
ஆதிசேஷன், கலைகள் அனைத்தையும் கற்று, தில்லை வனம் எனும் காட்டில், புலிக்கால் கொண்ட முனிவராகிய வியாக்ரபாதருடன் இணைந்து ஆதி மூலவருக்கு சிவபூஜை செய்து வந்தார். சிவபூஜையில்
மகிழ்ந்த சிவபெருமான், ஆனந்த நடனக் காட்சியை அளிப்பதாக அசரீரியாக வாக்கு அளித்தார்.
தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.
தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.
அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கையில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னகை பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.
ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார்.
வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.
ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி, ஒரு அற்புத பாடல் ஒன்றை இயற்றினார்.
பதஞ்சலி - நாக அம்சம். பாம்பின் வடிவம் கொண்டவர். பாம்புக்கு காலும் கிடையாது. கொம்பும் கிடையாது. ஆகவே தான் எழுதிய பாடல் தொகுப்பு ஒன்றிற்கு காலும், கொம்பும் இல்லாமலேயே இயற்றியுள்ளார்.நடராஜரின் ஆனந்த நடனத்தைப் போற்றிச் சொல்லக்கூடிய, தான் எழுதிய ஒரு பாடல் தொகுப்பினை, கால் வைத்த எழுத்தாகிய நெடில் ('ஆ'காரம்) மற்றும் கொம்பு வைத்த எழுத்தாகிய ஒகாரமும் இல்லாமலேயே எழுதியுள்ளார்.`அது ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடராஜ ஸ்தோத்ரம் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஸ்லோகங்களைச் சொல்லும்போதே ஆனந்த நடனக் காட்சி நம் கண்ணில் தெரியும்.
ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)
1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்விரிஞ்சிஸ¤ர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸ¤ரஸரித்தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம் ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்முகுந்த ஸ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்அகம்ப மனுகம்பிதரதிம் ஸ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸ¤மனஸம் ஹிமருசிம்அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ர வந்திதபதம்உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸ¤கந்தி வபுஷம்பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்
இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
மேற்கண்ட ஸ்லோகங்களில் எந்தப் பகுதியிலும் நெடில் (கா, சா, தா போன்றவை) மற்றும் ஒகாரம் (கொ, சொ, தொ போன்றவை) வராததைக் கவனிக்கவேண்டும்.
பதஞ்சலி எழுதிய பூஜா ஸூக்தம் என்ற பூஜை முறைப்படியே தினமும் ஆறுகாலமும் சிதம்பரத்தில் பூஜைகள் நடந்தேறுகின்றது.
பதஞ்சலி வடமொழியில் அமைந்த, பாணிணி சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார். ஆகையால் இவரை மஹா பாஷ்ய காரர் என்பார்கள்.
ஆதிசேஷன் - பாம்பு வடிவினர். ஆகையால் அவர் மூச்சுக் காற்று விஷம், அக்காற்றை சுவாசிப்பவர் மரணமடைவார்கள். பதஞ்சலி, தன் கலைகளையெல்லாம் சிஷ்யர்களுக்கு சொல்லித் தர ஆசைப்படுகின்றார். ஆதிசேஷன் வடிவத்தில் பாடங்களை நடத்தித் தர முன்வருகின்றார்.
இக்காரணத்தால், பாடம் நடத்தும்போது சீடர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு மந்திர சக்தி வாய்ந்த திரை அமைத்துப் பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பாடம் நடத்தும்போது திரையை விலக்கக் கூடாது என்ற ஒரு கட்டளையும் இட்டார்.
ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் கேட்கும் ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு அவரவர் கேள்விகளுக்கு தக்கவிதத்தில் அழகுற பதில் கூறி விளக்கங்கள் கூறுவார் ஆதிசேஷன்.
மாணவர்களுக்கோ இது அதிசயமாக இருக்கும். எப்படி ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என்ற சந்தேகம் சீடர்களுக்கு ஏற்பட்டது. திரையை விலக்க, குருவின் கட்டளையை மீற வேண்டுமே என்ற பயமும் இருந்தது.
ஒரு நாள் வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்புக்கார மாணவன் குரு பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காண வேண்டி ஆர்வமிகுதியில் திரையினைத் தள்ளினான். அங்கே பதஞ்சலி மஹரிஷி, ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக அமைந்ததைக் காண்கிறார்கள். திரை தள்ளியமையால், ஆதிசேஷனின் விஷத் தன்மை கொண்ட மூச்சுக் காற்றுபட்டு, எதிரில் இருந்த அனைவரும் இறக்கின்றனர்.
ஆழ்ந்த வருத்தம் கொண்டார் பதஞ்சலி. இத்தனை காலம் தான் கற்றுக் கொடுத்த அனைத்தும் வீணானதே என்று மிகவும் வருந்தினார்.
ஆனால், ஒரு ஆச்சர்யம். அன்று மட்டும் ஒரே ஒரு சீடர் மட்டும் மிகத் தாமதமாக வந்ததைக் கண்டதும் மிகவும் ஆனந்தித்தார். இவர் ஒருவராவது உயிரோடு இருக்கின்றாரே என்று மகிழ்ச்சி கொண்டார். அந்த ஒரு சீடருக்கு தன் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.
அவர் தான் கௌடபாதர்.
இந்த கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதர். (இவர் உத்தர கீதைக்கு பாஷ்யம் எழுதியவர்.)கோவிந்த பகவத் பாதரின் சீடர்தான் ஸ்ரீ ஆதிசங்கரர்.
ஆதிசேஷன் வடிவான பதஞ்சலியின் பாடலைக் கேட்டு இன்புற்று, ஆனந்த நடனக் காட்சி அருளும் ஸ்ரீ நடராஜ ராஜரை தரிசித்து ஆனந்தம் காண்போம்.
{ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித ஸ்தோத்திரத்தின் ஒரு பாடல் மட்டும் இங்கே கேட்கலாம்.
இதை அழகுற பாடியிருப்பவர் ஸ்ரீ T. செல்வ ரத்ன தீக்ஷிதர். இந்த ஸ்லோகங்களின் முழுமையான ஆடியோ தேவைப்படுவோர் அவரிடமே தொடர்பு கொள்ளலாம். (92451 07779)}
**************************
அதிசய சம்பவம் :
பாம்பு பூஜித்த லிங்கம்
கிரஹணத்தின்போது (15.01.2010) திருநாகேஸ்வரம் அருகில் உள்ள திருப்பெருமாநல்லூர் திருத்தலத்தில் பாம்பு ஒன்று மிக அழகாக, வில்வ மரத்தின் மீது ஏறி, வில்வம் பறித்து, அந்த வில்வத்தை சிவலிங்கத்தின் தலையில் வைத்து வழிபட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
- நி.த. நடராஜ தீக்ஷ¢தர்
MAIL : yanthralaya@yahoo.co.in
CELL : 94434 79572.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment